கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனு பரிசீலனையின்போது, அதிமுக, திமுகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 7 பேருக்குஅரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி பல்வேறு இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு மோதல் உருவாகி வருகிறது.
இந்நிலையில், கமுதி அருகே உள்ள ஆனையூர் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்கு அதிமுக, திமுக கட்சிகளுடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே தலைவர் பதவிக்கு மருதங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னிமுத்து என்ற அதிமுக பிரமுகரும், தி.மு.க.வை சேர்ந்த தியாகராஜனும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றபோது, அதிமுக, திமுகவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற ஆயுதங்களால் மோதிக் கொண்டனர்.
இதில் இரு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் 7 பேருக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அரிவாள் வெட்டு விழுந்த 7 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.