திரைப்பட வேலை நிறுத்தத்துக்குப் பிறகு வெளியாகி, ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள “மெர்க்குரி” திரைப்படம்.

ஏற்கெனவே, ‘மெர்க்குரி’ படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி, கடந்த 22-ம் தேதி, ‘மெர்க்குரி’ படக் குழுவினரைத் தனது போயஸ் இல்லத்துக்கு அழைத்து பாராட்டினார்.

இது குறித்து சொல்லும் கார்த்திக் சுப்புராஜ், “’தமிழ் திரைத்துறை வேலை நிறுத்தம் தீவிரமாக இருந்த நேரத்தில்  ஏப்ரல் 13-ம் தேதி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், ‘மெர்க்குரி’ திரைப்படம் வெளியானது. தமிழ்த்திரைப்பட இயக்குநரான எனக்கு…  `மெர்க்குரி’ படம் தமிழ்நாட்டில் மட்டும்  வெளியாகாமல் இருந்தது மனதுக்கு  வருத்தமாக இருந்தது. வேறு மாநிலங்களில்  படத்தைப் பார்த்தவர்கள்  பலர்,  “ஏன் தமிழ்நாட்டில் மெர்க்குரி வெளியாகவில்லை” என்று அக்கறையோடு கேட்டபோது மனதுக்குள் அப்படியொரு வருத்தம்.

தற்போது  தமிழ்நாட்டிலும்  ‘மெர்க்குரி’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது உற்சாகத்தை அளித்துள்ளது.

 

இந்தத் திரைப்படத்தைப்  பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு, அந்தப் படம் ரொம்பவும் பிடித்துவிட்டது. என்னை அழைத்து பாராட்டினார். அப்போதே, ”உங்களோட ‘மெர்க்குரி’ படத்துல வேலைபார்த்த குழுவினரை நான் பார்க்க வேண்டும்” என்று சொல்லியிருந்தார்.

இதையடுத்து கடந்த 22-ம் தேதி, ‘மெர்க்குரி’ குழுவை அழைத்துக்கொண்டு ரஜினி சாரின் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்றேன்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபுதேவா சார் சென்னையில் இல்லாததால், அவர் வரவில்லை. மற்ற அனைவரும் சென்றோம்.

ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து கரிசனமாக விசாரித்த ரஜினி சார்,  மகிழ்ச்சிபொங்க மனம்விட்டுப் பாராட்டினார்.

ஒளிப்பதிவாளர் திருவைப் பார்த்ததும், கட்டிப்பிடித்து ‘ஃபென்டாஸ்டிக் ஜாப்’ என்று மனதார வாழ்த்தினார். அடுத்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம்,  ‘ரசிகர்களை இசையில் கட்டிப்போட்டுவிட்டீர்கள்.  எக்ஸலன்ட்’ என்று மனதாரப் பாராட்டினார்.

.  ரஜினி சாரின் படத்துக்கான ஸ்கிரிப்ட் பரபரப்பாகத் தயாராகிவருகிறது, அதற்காக என்னை அப்ரிஷியேட் பண்ணி வாழ்த்தினார்” என்று மகிழ்ச்சியாக விளக்கினார்.