டில்லி:

சிறுமிகள் பாலியல் பாலத்காரத்துக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் முடித்துக் கொண்டார்.

காஷ்மீர், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகள், பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதை கண்டித்து டில்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி பாலிவால் ராஜ்கோட் பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், 12 வயதிற்கு மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார்.

இதை தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஸ்வாதி மாலிவால் தனது போராட்டத்தை முடித்து கொண்டார்.