மும்பை:
சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார்.
இந்த பயணத்தின் போது லண்டனில் நடந்த ஒரு மாநாட்டில் மோடி பேசுகையில், டாக்டர்கள் தவறான வழியில் நடப்பதாக தெரிவித்தார். அதோடு மருந்து நிறுவனங்களின் வளர்ச்சிக்காக தான் வெளிநாடுகளில் நடக்கும் மாநாடுகளில் டாக்டர்கள் கலந்துகொள்கின்றனர் என்று தெரிவித்தார்..
மோடியின் இந்த கருத்துக்கு இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐஎம்ஏ), மும்பை அசோசியேஷன் ஆப் மெடிக்கல் கன்சல்டன்ட்ஸ் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐஎம்ஏ மருத்துவர் ரவி வான்கேத்கர் கூறுகையில்,‘‘ 70 சதவீத இந்தியர்கள் நடத்தும் மருத்துவ அமைப்பை கொண்ட பிரிட்டனில் மோடி இவ்வாறு பேசியது அதிர்ச்சியளிக்கிறது. மருந்து விலை போன்ற பிரச்னைகள் அரசின் கையில் உள்ளது. அது எங்கள் கைகளில் இல்லை’’ என்றார்.
ஐஎம்ஏ பிரதிநிதி வினோத் சர்மா கூறுகையில், ‘‘வெளிநாடுகளில் நடக்கும் மாநாடுகளை மருந்து நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்வது கிடையாது. பிரதமரின் இந்த அறிக்கை வெட்கடோனது. மாநாடுகளில் புது விதிமுறைகள் மற்றும் புது மருந்துகள் குறித்து மட்டுமே அறிந்துகொள்ளப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பலரும் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.