சித்ரதுர்கா

பாஜக நடத்திய தேர்தல் பேரணியில் சுரங்க ஊழலில் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர் ஜனார்த்தன ரெட்டி கலந்துக் கொண்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

கர்நாடகாவின் சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜனார்த்தன் ரெட்டியின் இரு சகோதரர்களுக்கு பாஜக வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.  இது தவிர ஜனார்த்தன் ரெட்டியின் நெருங்கிய நண்பரான ஸ்ரீராமுலுவுக்கும்  தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது.   கடந்த மாதம் பாஜக தலைவர் அமித்ஷா ஒரு பேட்டியில் ஜனார்தன ரெட்டிக்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என அறிவித்திருந்தார்.

அதற்கு நேர் மாறாக ஜனார்த்தன் ரெட்டி தற்போது பாஜகவின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.    ஜனார்த்தன் ரெட்டியின் நெருங்கிய நண்பரான ஸ்ரீராமுலு வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணி ஒன்றை நடத்தினார்.   அந்தப் பேரணியில் ஜனார்த்தன் ரெட்டி கலந்துக் கொண்டார்.   ஸ்ரீராமுலு வேட்பு மனு அளிக்கும் போது ஜனார்த்தன் ரெட்டி உடன் இருந்துள்ளார்.

அப்போது நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா கலந்துக் கொண்டுள்ளார்.   அவர் ஜனார்த்தன் ரெட்டியை மேடைக்கு வருமாறு அழைத்துள்ளார்.   ரெட்டியும் மேடைக்குச் சென்று பொதுக்கூட்டத்தில் எடியூரப்பா மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ஆகியோருடன் கலந்துக் கொண்டுள்ளார்.    மேலும் தமது நண்பர் ஸ்ரீராமுலுவுக்காக தேர்தல் பரப்புரை நிகழ்த்தப் போவதாகவும் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளரான முரளிதர் ராவ் சமீபத்தில் ஜனார்த்தன் ரெட்டி பாஜகவுக்கு பிரசாரம் செய்வதை கட்சி தடை செய்யாது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]