பெங்களூரு:
சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்திய பாஜக எம்எல்ஏ சஞ்சய் பட்டீல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பெலகாவி பகுதியில் பாஜக எம்எல்ஏ சஞ்சய் பட்டீலின் சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியது. அதில், ‘‘ கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வெற்றியை சாலை, குடிநீர் பிரச்சினைகள் தீர்மானிக்கப் போவதில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் முடிவு செய்யப்போகிறது. ராமர் கோயிலுக்கும், பாபர் மசூதிக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் தீர்மானிக்கப் போகின்றது.
பாஜக ராமர் கோவில் கட்டுவதற்கு முயற்சிக்கிறது, ஆனால் காங்கிரஸ் பாபர் மசூதியை கட்ட விரும்புகிறது. யாருக்கெல்லாம் பாபர் மசூதி, திப்பு ஜெயந்தி வேண்டுமோ அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கட்டும். யாருக்கெல்லாம் சிவாஜி மன்னரின் ஆட்சி, ராமர் கோயில் வேண்டுமோ அவர்கள் பாஜக.வுக்கு வாக்களியுங்கள்’’ என்று பேசியிருந்தார்.
வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான சஞ்சய் பட்டீலின் பேச்சுக்கு பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் மீது கர்நாடகா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.