
சதபயா, ஒரிசா
ஒரிசா மாநிலம் சதபாயா கிராமத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள அம்மன் கோவில் ஒன்று கடல் மட்டம் ஏறியதால் இடம் மாற்றப்பட உள்ளது.
ஒரிசா மாநில கேந்திரபாதா பகுதியில் சதபாயா கிராமத்தில் உள்ளது மா பஞ்சுபாரதி ஆலயம். கடற்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஐந்து அம்மன் சிலைகள் உள்ளன. அவைகளை தொடவோ வழிபடவோ இங்குள்ள ஆண்களுக்கு உரிமை இல்லை. அந்தக் கோவிலில் தலித் வகுப்பை சேர்ந்த ஐந்து பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்து வருகின்றனர். அந்த கோவிலில் பெண்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது கடல் மட்டம் இந்தப் பகுதியில் உயர்ந்து வருகிறது. இதனால் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் என கிராம மக்கள் அஞ்சினர். அதனால் இந்தக் கோயிலை இங்கிருந்து 12 கிமீ தள்ளி அமைக்க திட்டமிட்டு கட்டிட வேலைகள் முடிந்துள்ளன. தற்போது அம்மன் சிலைகளை அந்தக் கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டி உள்ளது. பெண்கள் மட்டுமே தொட்டு பூஜை செய்யும் இந்த அம்மன் சிலைகளை எடை காரணமாக பெண்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை.
இதை ஒட்டி 5 பெண் அர்ச்சகர்களில் ஒருவரான சபிதா தலேல், “இந்தக் கோவிலின் ஐதீகப்படி ஆண்கள் கோவிலுக்குள் வரவோ அம்மன் சிலையை தொடுவதோ தவறாகும். ஆனால் பெண்களாகிய நாங்கள் இவ்வளவு எடை உள்ள கருங்கல் சிலைகளை பெயர்த்து அங்கு எடுத்துச் செல்வது இயலாத காரியம். அதனால் ஆண் சிற்பிகளையும் உள்ளூர் ஆண்களையும் உதவிக்கு அணுகி உள்ளோம்
நாட்டின் பல கோவில்களில் தலித்துகள் உள்ளே விட தயங்குகின்றனர். ஆனால் இங்கே தலித் பெண்களான நாங்கள் மட்டுமே அம்மன் சிலையை தொட முடியும். பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்காதது போல் ஆண்களை இங்கு அனுமதிப்பது இல்லை. கடலில் இருந்து சுமார் 5 கிமீ தள்ளி இருந்த கோவில் தற்போது கடலுக்கு மிக அருகே வந்து விட்டது” எனத் தெரிவித்தார்.
அதன்படி இன்று சிலைகளை இடம் மாற்றும் பணி துவங்கி உள்ளது. அதன் பிறகு அம்மனை சுத்தீகரிக்கும் சடங்குகளை இந்த பெண் அர்ச்சகர்கள் செய்ய உள்ளனர்.
[youtube-feed feed=1]