நாசிக்

ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க மை இல்லாததால் நோட்டுக்கள் அச்சடிக்க முடியாத சூழல் நிலவுவதாக நாசிக் அச்சக ஊழியர் சங்கத் தலைவர் கூறியது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

தற்போது நாடு முழுவதும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நிலவி வருகிறது.  தெலுங்கானா,  மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ரூபாய் நோட்டு இல்லாததால்  ஏ டி எம் கள் மூடப்பட்டன.   இந்த தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.    நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரூ. 500 நோட்டுகள் 5 மடங்கு அச்சடிக்க உள்ளதாகவும் விரைவில் தட்டுப்பாடு நிங்கும் எனவும் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் அச்சகத்தில் பெரும்பாலான ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப் படுகின்றன.   இங்குள்ள ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜததீஷ் கோட்சே, “இங்கு ரூ. 200 மற்றும் ரூ. 500 நோட்டுக்கள் அதிக அளவில் அச்சிடப்படுகின்றன.  அவைகளை அச்சிடுவதற்கான மை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.   தற்போது அந்த மை முழுவதுமாக தீர்ந்து விட்டது.

இது குறித்து ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் மை இன்னும் அச்சகத்துக்கு வந்து சேரவில்லை.    இதனால் ரூ.200 மற்றும் ரூ.500 அச்சடிக்கும் பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.   தற்போதைய நோட்டு தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணம்”  எனக் கூறி உள்ளார்.

நாடெங்கும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உள்ளதால் அதிக நோட்டுக்கள் அச்சடிக்க உள்ளதாக அரசு கூறியதும் அதே நேரத்தில் அச்சடிக்கத் தேவையான மை இல்லாததும் மக்களிடையில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.