147
“அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களுக்கு ஒரே நாளில் அனுமதியளித்த அதிகாரிகளின் வேகம் வியக்க வைக்கிறது. இதே வேகத்தை மற்றவர்களுக்கும் இந்த அதிகாரிகள் காட்டியுள்ளனரா? என்பதை அறிய விரும்புகிறேன்” என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.
சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி மற்றும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அதன் தலைவர் இளங்கோ ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் 30-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.   அதில், தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் (டிசம்பர் 31-ம் தேதி) நடக்கவிருப்பதை தடை செய்ய வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சிக்காக நடைபாதை களை ஆக்கிரமித்து அதிமுக வினர் வைத்திருந்த பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கல்யாண சுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது. அதே நேரம்,. அனுமதியின்றி வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்கள் குறித்த விபரங்களை கோர்ட்டல் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “ப்ளக்ஸ் பேனர் வைக்க முறைப்படி அனுமதி கோரப்பட்டிருந்தது. . அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு 350 ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க உரிய அனுமதி வழங்கப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இல்லை” என்று கூறப்பட்டிருந்தது.
சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிவஞான சம்பந்தம், “அதிமுகவினர் நடை பாதைகளைக்கூட ஆக்கிரமித்து கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான பேனர்களை விதிமுறைகளை மீறி வைத்திருந்தனர். இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது” என்றார்.
இதையடுத்து தலைமை நீதிபதி, “அரசு தரப்பு பதிலில் 350 ப்ளக்ஸ் பேனர்களுக்கும் விண்ணப்பித்த டிசம்பர் 30-ம் தேதியன்றே அனுமதி தரப்பட்டு, அதற்கான கட்டணமும் உடனுக்குடன் வசூலி்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில் அனைத்து பேனர்களுக்கும் அனுமதி அளித்த அதிகாரிகளின் வேகம் வியப்பை அளிக்கிறது. இதே செயல் திறனை அதிகாரிகள் மற்றவர்களுக்கும் காட்டியுள்ளார்களா என்பதை அறிய இந்த நீதிமன்றம் விரும்புகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் கடந்த 2015-ம் ஆண்டு எத்தனை ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன என்பது குறித்தும், அவற்றுக்கு எந்தெந்த தேதிகளில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் முழுவிவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டனர். வழக்கு பிப்ரவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முழுதும் வைக்கப்பட்ட பேனர்கள் குறித்த தகவல்களை நீதிமன்றம் கேட்டுள்ளதை அடுத்து, அரசு தரப்புக்கு நீதமன்றம் கிடுக்குப்பிடி போட்டுள்ளதாகவே தெரிகிறது.