கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா
அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த அமைப்பின் இணைய தளத்தில் வீரர்கள் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் நேற்று மல்யுத்தப் பிரிவுகளில் பங்கேற்க உள்ள வீரர்கள் பட்டியல் வெளியாகியது.
இந்தப் பட்டியலில் இந்திய வீரர் சுஷில் குமார் பெயர் இடம் பெறவில்லை. காமன்வெல்த் சுஷில் குமார் ஏற்கனவே இரு முறை தங்கப்பதக்கங்கள் வென்றவர் ஆவார். ஃபிரீ ஸ்டைல் 74 கிலோ பிரிவில் ஏற்கனவே பதக்கங்கள் பெற்ற இவர் தற்போது தனது மூன்றாவது பதக்கம் பெற கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவரது பெயர் இடம் பெறாதது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
இது குறித்து இந்திய ஒலிம்பிக் போட்டியிந்தலைவர் நரேந்திர பத்ரா, “சுஷில் குமாரின் பங்கேற்பு அங்கீகார அட்டை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருடைய பெயர் உறுதி செய்யப்பட்ட பின் எவ்வாறு விடுபட்டது என்பது புரியவில்லை” எனக் கூறி உள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு செயலாளர் வினோத் தோமர், “தொழில்நுட்ப கோளாறுகளால் சுஷில் குமார் பெயர் விடுபட்டிருக்கக் கூடும். இது குறித்து நாங்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
பெயர் தெரிவிக்க விரும்பாத விளையாட்டு வீரர் ஒருவர் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுடன் சுஷில் குமாருக்கு மனத்தாங்கல் இருப்பதால் அவருடைய பெயர் விடுபட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.