டில்லி:
காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் சரியாக இருக்கும் என்று தமிழக அரசு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற மேல்முறையீடு வழக்கில், கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
உச்சநீதி மன்றம் விதித்த கெடு நாளை முடிய உள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய பாரதிய ஜனதா அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
ஆனால், இதுகுறித்து ஆலோசனை நடத்துவதாக கூறி, 4 மாநிலங்களின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கடந்த 9 ந்தேதி நடத்தியது. அப்போது கர்நாடகத்தின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பிலுரம் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று டில்லி சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், மத்திய நீர்வளத்துறையிடம் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில், காவிரி வழக்கு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்றும், அகவே உச்சநீதி மன்றம் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையே அமைக்க வேண்டும் என்றும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே சரியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.