இசையமைப்பாளர்  இளையராஜா மீது கிறிஸ்துவ அமைப்புகள் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளன.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “இயேசு உயிர்த்தெழுந்து வந்ததாக கூறுவது தவறு. உண்மையில் ரமண மகரிஷி மட்டுமே 16 வயதில் உயிர்த்தெழுந்தவர்” என்றார்.

இந்தப்பேச்சுக்கு கிறிஸ்தவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். “இயேசு உயிர்தெழுந்த ஈஸ்டர் திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், கிறிஸ்தவர்களின் அடித்தளமான மத நம்பிக்கையான உயிர்த்தெழுதல் குறித்து இழிவாக பேசேயிருக்கிறார் இளையைராஜா” என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

 

இந்த நிலையியில் கிறிஸ்தவ அமைப்பான, சிறுபான்மை மக்கள் நலக்கட்சி தலைவர் சாம் ஏசுதாஸ் தலைமையில்  ஐம்பது பேர் இன்று காலை இளையராஜாவின் சென்னை தி.நகர் வீட்டை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து முன்னதாகவே அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். முற்றுகையிட வந்தவர்களை கலைந்துபோக காவல்துறையினர் கூறினார்கள். அவர்கள் மறுக்கவே சுமார் ஐம்பது நபர்களை கைது செய்தனர்.

தற்போது இளையராஜா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிறிஸ்துவ அமைப்புகள் சார்பில், இளையராஜா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்  இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். தயாநிதி அளித்துள்ள இந்த புகாரில், “இளையராஜா, கிறிஸ்துவர்களின் மத நம்பிக்கையை புண்படுத்தி உள்ளார். இது இந்திய சட்டப்படி குற்றம். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கோருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.