டில்லி:
தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.
காவிரி நதி நீர் விவகாரத்தில்,கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதன்படி, 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, வரும் 29-ம் தேதியுடன் 6 வார கெடு முடிவடைகிறது.
இந்நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு, கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதி தீர்ப்பு குறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதற்கு, தமிழக அரசு உள்ள தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், வரும் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் டில்லியில் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பாராளுமன்றம் அருகே உள்ள நாடாளுமன்ற தெரு காவல் நிலைய சாலையில் நடைபெறும் இப்போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் ரோட்டில் அமர்ந்தும், படுத்தும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.