டில்லி
உயர் கல்வித் துறையை கட்டுப்படுத்த ஒரே அமைப்பை உருவாக்கும் மசோதாவை வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது உயர்கல்வித்துறையில் தொழில்நுட்பக் கல்வியை ஏ ஐ சி டி யு எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு என்கிற அமைப்பு கட்டுப் படுத்தி வருகிறது. அதே போல தொழில்நுட்பம் அல்லாத உயர்கல்வி யுஜிசி எனப்படும் பல்கலகலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவை அனைத்தையும் ஒரே அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது.
இது குறித்து மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர், “ஒரே அமைப்பின் கீழ் உயர்கல்வியைக் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது. இது குறித்து 40 அம்ச திட்டம் ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இதையொட்டி கல்வியாளர்களுடன் பலமுறை விவாதிக்கப்பட்டு மசோதா ஒன்றை அரசு உருவாக்கி உள்ளது. இந்த மசோதா வரும் ஜூன் மாதத்திற்குள் அனைத்து கல்வித்துறை அதிகாரிகளிடமும் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
கல்வித்துறை அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின் வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். வரும் 2019ஆம் வருடம் மார்ச் மாதத்தில் இந்த மசோதாவை அமுலுக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போதுள்ள யூ ஜி சி, ஏ ஐ சி டி யு போன்ற அமைப்புகள் கலைக்கப்பட்டு ஒரே அமைப்பாக மாற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த அமைப்பின் மூலம் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க ஆர்வம் உண்டாக்க முயற்சிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.