eaef548b0da340e0807b58a267847746_18
ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது என்று வட கொரியா  அறிவித்துள்ளது.
முன்னதாக வெடிகுண்டு சோதனை நடைபெற்ற இடம் அருகே பூகம்கம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. எனினும், வெடிகுண்டு சோதனையாலே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்கள் கட்சி வாக்குறுதியளித்தப்படி இன்று  காலை 10 மணிக்கு வட கொரிய குடியரசுவின் முதலாவது ஹைட்ரஜன் வெடிகுண்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்று வட கொரியா  அரசு தொலைகாட்சி அறிவித்தது.
இந்த வெடிகுண்டு சோதனையை, வட கொரிய விஞ்ஞானிகள் தங்களது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்துள்ளனர். இதன் மூலம் வட கொரியாவும் மேம்பட்ட அணு ஆயுதங்களை கையாளும் நாடுகளுடன் இணைந்துள்ளது.
இன்னும் 2 நாளில் தனது பிறந்தநாள் கொண்டாடவுள்ள வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன்  தனிப்பட்ட முறையில் இந்த சோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
போர் ஏற்பட்டால் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையின் அடிப்படையில், வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவுக்கு எதிரான நிலையை அமெரிக்கா தொடரும் வரை, அணு ஆயுத உற்பத்தியை நிறுத்த மாட்டோம் என வட கொரியா அறிவித்துள்ளது.
‘‘வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு சரியானபதில் அளிக்கப்படும். தென் கொரியா உள்ளிட்ட எங்களது கூட்டணி நாடுகளை  தொடர்ந்து பாதுகாப்போம்’’ என அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், வட கொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனை  தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.