மாலே
மாலத்திவில் நீதிபதிகள், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயும் உட்பட பல அரசு அதிகாரிகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மாலத்தீவில் கடந்த மாதம் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயும், முக்கிய நீதிபதிகள், காவல் அதிகாரிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவசர நிலையை அறிவித்த இந்நாள் அதிபர் யாமூன் அப்துல் கயூம் முன்னாள் அதிபருக்கு உறவில் சகோதரர் முறை ஆகிறார். கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் அதிபர் மற்றும் மூன்று நிதிபதிகள் மீது தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களை தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டதற்கு அரசு எந்த ஒரு காரணமோ ஆதாரமோ அளிக்கவில்லை. அதே வேளையில் இந்த வழக்கு நிரூபிக்கப் பட்டால் இவர்களுக்கு 10 முதல் 15 வருட சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் இவர்கள் தங்களது தொலைபேசியை சோதனைக்காக அதிகாரிகளிடம் அளிக்க மறுத்துள்ளனர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அவசர நிலை சட்ட அறிவிப்பு முடிவு பெறுகிறது. இந்த அவசர நிலைச் சட்ட அறிவிப்புக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அரசு இந்த சட்டத்தை நீட்டிக்க தற்போது உத்தேசிக்கவில்லை என தெரிவித்துள்ளது. சுமார் 1000 தீவுகளை உள்ளடக்கிய மாலத்தீவு பிரதேசத்தில் சுற்றுலா மிகவும் முக்கியமாக இருந்துள்ளது. தற்போது அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து அரசுக்கு கடும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.