ண்டன்

ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுவை செலுத்துவதன் மூலம் பார்வை இழந்த முதியவர்களின் பார்வைத் திறனை மீட்டெடுக்கலாம் என லண்டனில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண் பார்வை மங்குவது வழக்கம்.   அவர்களுக்கு கண்ணாடி அணிவதாலும் அல்லது கண்ணில் வளர்ந்துள்ள சதையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதாலும் மீண்டும் பார்வைத் திறனை பெற முடியும்.    ஆனால் வயதானதால் பார்வை குறைபாடு என்னும் குறிப்பிட்ட பார்வை இழப்பு 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிலருக்கு ஏற்படுகிறது.

இவர்களுக்கு மங்கலான பார்வையால் பார்வைத் திறன் பாதிக்கப்படுகிறது.   இவ்வகை பாதிப்புகளுக்கு கண்ணாடி அணிவதனால் தீர்வு கிடைப்பதில்லை.    இவ்வாறு பார்வை இழப்பு உலர்ந்த இழப்பு மற்றும் ஈர இழப்பு என இரு வகையில் உள்ளது.    இந்த இரு வகையிலும் பார்வைத் திறன் சிறிது சிறிதாக குறைந்து ஒரு கால கட்டத்தில் பார்வைத் திறன் முழுவதுமாக பறி போய் விடுகிறது.

லண்டனில் உள்ள பார்வைத்திறன் அற்றோர் சிகிச்சை மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த பார்வைக் குறைபாட்டுக்கு முக்கிய காரணம் கண் திரையின் பின் உள்ள செல்களே என கண்டறிந்துள்ளனர்.    இந்த பழுது பட்ட செல்களை அகற்றி ஸ்டெம் செல் எனப்படும் குருத்துணுவை செலுத்தி இரு நோயாளிகளை பரிசோதித்துள்ளனர்.

இந்த பரிசோதனையில் 60 வயதைக் கடந்த பெண் ஒருவரும், 80 வயதைக் கடந்த ஆண் ஒருவரும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.   கடந்த ஒரு வருடமாக விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் இந்த இருவரும் இருந்துள்ளனர்.  சோதனை வெற்றி அடைந்து தற்போது அவர்கல் இருவரும் முழுப் பார்வைத் திறன் பெற்றுள்ளனர்.   அவர்களால் கண்ணாடி இல்லாமல் பார்க்க, படிக்க மற்றும் எழுத முடிகிறது.    இதை ஒட்டி அந்த இருவரும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் ஈர வகை குறைபாடு இருந்துள்ளது.   விஞ்ஞானிகள் இந்த சோதனை வெற்றியை அடுத்து  உலர்ந்த இழப்பு குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.   உலகில் இது போல சுமார் 1.8 மில்லியன் அதாவது 18 லட்சம் மக்கள் இவ்வாறு பார்வைக் குறைவால் அவதிப்படுகின்றனர்.   அவர்களில் பெரும்பாலானோருக்கு ஈர வகை குறைபாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.