சென்னை

சென்னையில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் நீட் தேர்வுக்காக செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது மருத்துவக் கல்வி படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்  பட்டுள்ளது.   நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அரசு தொடங்கி நடத்தி வருகிறது.  பல சிறப்பு வகுப்புக்களையும் அரசு நடத்தி வருகிறது.   அதே நேரத்தில் பல தனியார் பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.   இந்த தனியார் பயிற்சி மையங்களில் கல்விக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாக பல மாணவ மாணவிகள் கூறி வருகின்றனர்.

இதற்கான செயலி ஒன்றை அமைப்பது குறித்து செய்தியாளர்களுடம் தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று சந்திப்பு நிகழ்த்தியது.   அப்போது பேசிய தொண்டு நிறுவனத் தலைவர் ராம் பிரகாஷ், “விரைவில் காணொளி மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் செயலி ஒன்று அறிமுகப்படுத்த உள்ளோம்.    அரசு பல பயிற்சி வகுப்புக்களை நீட் தேர்வுக்காக நடத்தி வருகிறது.   ஆனால் இன்னும் அந்த வசதி பல சிறிய கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கு போய் சேரவில்லை.

தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் தனியார் பயிற்சி மையங்கள் உள்ளன.  ஆனால் விண்ணப்பப் படிவத்தின் விலையான ரூ.1400 செலவழிக்கவே பலரால் முடியாத நிலையில் இந்த மையங்களில் சேர்க்க எத்தனை பேரால் முடியும்?  இதனால் தான் LETS ACT என்னும் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப் பட உள்ளது.   இந்த செயலியின் மூலம் நீட் தேர்வுக்கு மாணவர்கள் எளிதில் தயாராக முடியும்”  என தெரிவித்துள்ளார்.