சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  டில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதி நீர் பங்கீடு குறித்த வழக்கில்  உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டி.எம்.சி நீரை 177.25 டி.எம்.சி நீராகக் குறைத்து உத்தரவிட்டது. மேலும், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

அதே நேரம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. போராட்டங்களும் நடத்தி வருகின்றன. தற்போது நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆனால் மத்திய அரசு இதற்கான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், “உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” என்று மத்திய அரசை வலியுறுத்தி  டில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

மார்ச் 26ம் தேதி முதல் பாராளுமன்றத்தின் முன் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்று பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார்.