டில்லி:
நாகாலாந்து முன்னாள் முதல்வர் ஜிலியாங்குக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) குற்றம்சாட்டியுள்ளது.
நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) பிரிவு என்பது தீவிரவாத இயக்கங்களுள் ஒன்று. இந்த இயக்கத்துடன் இணைந்து பணம் பறித்ததில் முன்னாள் முதல்வர் ஜிலியாங்குக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் இருக்கின்றன என தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. இதனால் விசாரணைக்கு ஜிலியாங் ஆஜராக என்.ஐ.ஏ. அண்மையில் சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால் ஜிலியாங் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வருகிறார். மேலும், தமக்கும் தமது முந்தைய அரசுக்கும் நாகா தீவிரவாதிகளுடன் எந்த தொடர்பும் கிடையாது என்று எழுத்துப்பூவமாக பதில் அளித்திருந்தார் ஜிலியாங்.
இந்நிலையில் ஜிலியாங்குக்கு எதிராக ஆவணங்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜிலியாங் கைது செய்யப்படலாம் என்ற யூகம் கிளம்பியுள்ளது.