டில்லி
வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டு உபயோகப்படுத்துவது குறித்து மற்ற கட்சிகளுடன் விவாதம் செய்த பின் பரிசீலனை செய்யப்படுமென அரசு அறிவித்துள்ளது.
தற்போது வாக்குப் பதிவின் போது வாக்கு இயந்திரங்கள் மட்டுமே அதிக அளவில் உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வரும் தேர்தல்களில் வாக்கு சீட்டு உபயோகப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் வற்புறுத்தி வருகிறது.
நேற்று இது குறித்து காங்கிரஸ் கட்சி ஒரு தீர்மானம் இயற்றியது. அந்த தீர்மானத்தில் பல ஜனநாயக நாடுகளில் உள்ளதைப் போல இந்தியாவிலும் பழையபடி வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. நடந்து முடிந்த பல தேர்தல்களில் வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்ததால் பாஜக வெற்றி பெற்றதாக காங்கிரஸ் பலமுறை கூறி உள்ளது குறிப்பிடத் தக்கது.
அதற்கேற்றார்போல் பல முறை தேர்தல் அதிகாரிகள் இயந்திரம் பழுது அடைந்ததால் அதை மாற்றி உள்ளனர். சென்ற வருட நடந்த உ.பி. மாநில உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரம் உபயோகப் படுத்தாத பல இடங்களில் பாஜக தோல்வி அடைந்ததாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருந்தது.
தற்போது பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஒரு செய்தி நிறுவனத்திடம், “முறைகேடுகள் நடப்பதாக பல புகார்கள் எழுந்ததினால் வாக்குச் சீட்டிலிருந்து வாக்கு இயந்திர முறை மாற்றப்பட்டதை நான் காங்கிரஸுக்கு நினைவு படுத்துகிறேன். தற்போது அனைத்துக் கட்சிகளும் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என சொல்கின்றன. அனைத்துக் கட்சிகளுடனும் இது குறித்து விவாதித்த பின் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவது குறித்து பரிசீலிக்கப்படும்” எனக் கூறி உள்ளார்.