டில்லி:

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்போவதாக   காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

டில்லியில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் வேளாண் துறை, வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஒழிப்பு தொடர்பாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் கொண்டு வந்தார்.

அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

மோடி அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளால் நாட்டில் வேளாண் துறை மிகவும் நெருக்கடியை சந்தித்து உள்ளது. 2022-ம் வருடத்துக்குள்  விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மத்திய பாஜக அரசு கூறுவதெல்லாம் வெறும் பேச்சுதான்.  மோடி அரசின் விவசாயிகள் பயிர்க்காப்பீட்டு திட்டத்தால் தனியார் நிறுவனங்கள்தான் பயன் பெற்று வருகின்றன.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் திட்டங்களால் 3.2 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். காங்கிரஸ் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும் பண்ணை விவசாயிகள் முதிய வயதில் சமூக பாதுகாப்பு பெறுவதற்காக நிரந்தர ஆணையம் அமைக்கப்படும்.

வறுமையை ஒழிக்க தேசிய வறுமை ஒழிப்பு நிதியம் ஒன்றும் உருவாக்குவோம்.  நாட்டில் அதிக சொத்து வைத்துள்ள ஒரு சதவீதத்தினர் மீது 5 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும். ஏழைகள் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்ற நிலை தவிர்க்கப்படும்” என்று காங்கிரஸ் கட்சி தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.