டில்லி
இந்திய நாட்டை பாஜகவிடம் இருந்து மீட்போம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.
காந்திரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளித்தது தெரிந்ததே. வரும் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல வியூகங்களை வகுக்கும் விதமாக இந்த விருந்து நடைபெற்றது. நேற்று பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார்.
அவர், “2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையில் பாஜக ஊழலற்ற நல்லாட்சியை வழங்கி வளர்ச்சியை அளிகப்ப போவதாக பொய் வாக்குறுதிகளை மோடி அளித்து வெற்றி பெற்றார். தற்போது அவை பொய் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதாரம் நன்கு வளர்ச்சி அடைந்தது. லட்சக் கணக்கானோர் வறுமையில் இருந்து மீண்டனர். ஆனால் அவை அனைத்தையும் கெடுத்தது இந்த மோடியின் தலைமையிலான ஆட்சியே.
மோடி அரசு அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை மட்டுமே செய்து வருகிறது. அந்த சதிக்கு காங்கிரஸ் அடிபணியாது. மாறாக இந்த அரசின் மோசடிகளை காங்கிரஸ் கட்சி அம்பலப் படுத்தி வருகிறது. மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்கும் பணியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. பாஜகவிடம் இருந்து நாம் நாட்டை விரைவில் மீட்போம்.
இந்த நாட்டின் மிகப் பெரிய வெற்றியாக காங்கிரஸ் கட்சியின் வெற்றி அமைய உள்ளது. காங்கிரஸ் என்பது ஒரு மாபெரும் இயக்கம். அதை சரியாக வழி நடத்த ராகுல் காந்தி இந்த சவாலான நேரத்தில் தலைவராகி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் சிக்மகளூர் தொகுதியில் இந்திராகாந்தி வென்றது இந்திய அரசியலில் மாற்றத்தை உண்டாக்கியது. தற்போது அதே போல ஒரு வெற்றி தேவை.” எனக் கூறினார்.