வாஷிங்டன்

ந்தியா உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தாவிடில் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும் என நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் பால் குரூக்மென் கூறி உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பொருளாதார நிபுணர்களில் ஒருவர் பால் குரூக்மென்.   இவர் கடந்த 2008 ஆம் வருடம் பொருளாதார துறையில் நோபல் பரிசு வென்றவர்.    இவருடைய கருத்துக்கள் பொருளாதார உலகில் மிகவும் கவனிக்கப்பட்டு வருகின்றன.  இவர் சமீபத்தில் நியூஸ் 18 செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   அப்போது அவர் தற்போதைய உலகப் பொருளாதாரம் குறித்து பேசினார்.

பால் குரூக்மென், “உலகப் பொருளாதாரத்தில் ஆசிய நாடுகள் நன்கு முன்னேறி வருகின்றன.   அதில் இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது.   உலகெங்கும் முன்னேறி வரும் நாடுகள் உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தி வரும் வேளையில் இந்தியா சேவைத் துறையில் கவனம் செலுத்தி வருகிறது.   நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இதுவே முக்கியக் காரணம் ஆகும்.

ஆனால் இவ்வாறு சேவைத் துறையில் இந்தியா அதிக கவனம் செலுத்துவதால் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது.   எனவே உற்பத்தித் துறையிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.   அவ்வாறு இந்தியா கவனம் செலுத்தாவிடில் விரைவில் வேலைவாய்ப்பின்மை கடுமையாக அதிகரிக்கும்.   அதை தவிர்த்தாக வேண்டும்.

மேலும் தற்போது ஆசிய நாடுகளில் உற்பத்தித் துறையில் முன்னேறிய நாடான ஜப்பான்  முன்னேற்றத்தை முழுமையாக அடைந்து விட்டது.   இனி உழைக்கும் நாடுகள் வரிசையில் ஜப்பான் கிடையாது.   சீனாவும் அதே நிலைதான் எனினும் உலக நாடுகள் மத்தியில் சீனா மீது நம்பிக்கை குறைகிறது.   சீனாவிலும் ஜப்பானிலும் தற்போது போதிய ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது.

இந்த நேரத்தில் இந்தியா தனது உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் அடைந்து வேலைவாய்ப்பை அதிகரிக்க இயலும்.   இந்தியாவில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன.    இந்திய பிரதமர் மோடி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.   அந்த அறிவிப்பு முழுமையாக நிறைவேற்றப் பட்டால் மட்டுமே இந்திய பொருளாதாரம் முன்னேறும்”  என கூறி உள்ளார்.