டில்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி கடன் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் ‘‘இந்த மோசடியை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உரையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று வக்கீல் வினீத் தந்தா என்பவர் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை நடந்த போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீது அப்போது நடந்த விசாரணையிஜ் போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘விசாரணை அமைப்பு முறையாக விசாரிக்க தவறினால் தான் இந்த நடவடிக்கைக்கு செல்ல வேண்டும். இதற்கு தேவையானவற்றை அரசு செய்யவில்லை என்றால் தான் மனுதாரர் இங்கே இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தது.
தலைமை நீதிபதியுடன் நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசுத் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர். விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில்,‘‘வாக்குவாதங்கள் மட்டும் நீதிமன்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. நாங்கள் சட்டப்பூர்வமானவற்றை மட்டும் தான் கேட்போம்.
உணர்வுபூர்வமானவற்றை கேட்கமாட்டோம். ஒரு மனு மீது இது போன்று விவாதம் நடத்துவது சரியான வழிமுறை கிடையாது. இது விளம்பர ஆதாயம் தேடுவதற்காக மட்டுமே செய்யப்படுகிறது. இதன் மீது இன்று நாங்கள் எதுவும் கூறுவதற்கில்லை’’ என்றனர்.
இதை தொடர்ந்து பொதுநல வழக்கு மனு மீதான விசாரணையை வரும் 16ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த மனு மீதான எதிர்ப்புகளை அன்றைய தினம் அட்டர்னி ஜெனரல் தெரிவிக்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்.