
பெங்களூரு
கர்னாடகா மாநில முன்னேற்றத்தைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு உத்திரப் பிரதேச மாநிலத்தை முன்னேற்ற முயற்சிக்கவும் என கர்னாடகா முதல்வர் சித்தராமையா உ.பி. முதல்வர் யோகிக்கு அறிவுரை அளித்துள்ளார்.
உத்திரப் பிரதேச முதல்வராக யோகியும், துணை முதல்வராக கேசவ் பிரசாத் மௌர்யாவும் பதவி ஏற்றனர். அதையொட்டி இருவரும் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் யோகியின் கோரக்பூர் மற்றும் கேசவின் புல்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது.
இதையொட்டி கரனாடகா மாநில முதல்வர் சித்தராமையா, “சரித்திரத்தில் குறிப்பிடத் தக்க வெற்றி பெற்றதற்கு சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிக் கூட்டணிக்கு நல் வாழ்த்துக்கள். பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் ஒற்றுமையே இந்த வெற்றியை தேடித் தந்துள்ளது. இனி உத்திரப் பிரதேச முதல்வர் கர்னாடகா மாநில முன்னேற்றத்தைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு தனது மாநில முன்னேற்றத்தையும் கட்சியின் முன்னேற்றத்தைப் பற்றியும் பேச ஆரம்பிக்கட்டும்” என கூறி உள்ளார்.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள கர்னாடக மாநில சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி யோகி கர்னாடகாவில் இருமுறை பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் கர்னாடகா மாநிலத்தை முன்னேற்ற சித்தராமையா அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியது குறிப்பிடத் தக்கது.