கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் தாயும் மகளும் கருணை கொலைக்கு அனுமதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஷசி மிஸ்ரா (59) என்பவரும் அவரது மகள் அனாமிகா மிஸ்ராவும் (33) குடியரசுத் தலைவருக்கு கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார்கள். . மஸ்குலர் டைஸ்ட்ரோஃபி (Muscular Dystrophy) என்ற தசைநார் தேய்வு நோயினால் பாதிக்கப்பட்டு தினசரி துன்ப்பபடுவதாக அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோருக்கும் இது குறித்து கடிதம் எழுதியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
“ஏற்கெனவே எங்கள் இருவருடைய சிகிச்சைக்காக அரசு தரப்பில் ரூ.50,000 அளிக்கப்பட்டது. ஆனால் அது போதுமானது அல்ல. அரசு எங்கள் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் அல்லது கருணைக் கொலைக்கு அனுமதிக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரபணுக்கள் மூலம் தொடர்ந்து பரவும் தசைநார் தேய்வு நோய் அனாமிகா மிஸ்ராவின் தந்தை கங்கா மிஸ்ரா ஏற்பட்டு 15 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். 1985ஆம் ஆண்டு அனாமிகாவின் தாயான ஷசி மிஸ்ராவுக்கும் இதே நோய் இருப்பது தெரிய வந்தது. ஆறு வருடங்களுக்கு முன் அனாமிகாவும் இந்த கொடிய நோயின் தாக்குதலுக்கு ஆளானார்.
சென்ற மார்ச் 9ஆம் தேதி கருணைக் கொலை தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாதவர்களுக்கு கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.