
டில்லி
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள குற்றப் பின்னணி கொண்ட சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டில் குற்றப் பின்னணி உள்ள சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விவரங்களை உச்சநீதிமன்றம் கேட்டதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. குற்றப் பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பொது நல மனுவை ஒட்டி இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த அறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் உயர்நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், “கடந்த 2014 முதல் 2017 வரையிலான காலத்தில் மொத்தம் 3816 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 1765 சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்டுள்ளனர். 3816 வழக்குகளில் இதுவரை 125 வழக்குகள் மட்டுமே ஒரே வருடத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் 248 சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் குற்றவியல் வழக்குகள் உள்ளன. உ. பி. மாநிலமே இதில் முதல் இடத்தில் உள்ளன. அடுத்த இடங்களில் தமிழ்நாடு (178), பீகார் (144), மற்றும் மேற்கு வங்கம் (139) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதை அடுத்து ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.” என கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]