டில்லி
போக்குவரத்து மிகவும் அதிகம் உள்ள டில்லி சாலைகளில் பயணிக்க வரி விதிக்க டில்லி அரசு உத்தேசித்துள்ளது.
டில்லியில் சாலைப் போக்குவரத்து எல்லா இடங்களிலும் அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள நகரங்களில் அதிகமாக டில்லியில் சுமார் 31 லட்சம் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு கிமீ தூரத்துக்கு 93 கார்கள் உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு அதிகமாகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு குறிப்பாக குளிர் காலங்களில் புகை மண்டலத்தால் எதிரில் வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை ஏற்படுகின்றது.
அரசு மாசுபடுதலை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் செய்து வருகிறது. ஆனால் போக்குவரத்தை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. தற்போதுள்ள நிலையில் டில்லியில் சுமார் 21 சாலைகளில் போக்குவரத்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதை கட்டுப்படுத்த இந்த சாலைகளில் பயணிக்கும் கார்களுக்கு வரி வசூலிக்க டில்லி அரசு திட்டமிட்டுள்ளது. எப்போது இந்த வரிவிதிப்பு அமுலுக்கு வரும் என்பதோ வரி விகிதங்கள் பற்றியோ அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சமூக ஆர்வலர்களும் இந்த வரி விதிப்பை எதிர்த்துள்ளனர்.
இது குறித்து மக்கள், “இந்த வரி விகிதம் எவ்வாறு அமைக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. மேலும் இது லண்டனில் உள்ளது போல நுழைவு வரி என அமைக்கப்படுமா என்பதும் தெளிவு படுத்தப்பாடவில்லை. இது போல வரி விதிக்கும் முன் அரசு போக்குவரத்து மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அடுத்ததாக இந்த வழித்தடங்களுக்கான மாற்று வழித்தடங்கள் அமைக்க வேண்டும். “ என கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது டில்லி மக்களுக்கு 10000 அரசு பேருந்து தேவைப்படுகிறது. ஆனால் 5292 பேருந்துகள் மட்டுமே அரசு இயக்கி வருகிறது. ஏற்கனவே டில்லி அரசு 2015ஆம் வருடம் இதே போல வரி விதிக்க திட்டமிட்டு போதுமான அரசு பேருந்து இல்லாததால் இந்த வரிவிதிப்பை கைவிட்டது குறிப்பிடத் தக்கது.