டில்லி
மோடி அரசின்நிலக்கரி ஊழலால் அதானி குழுமத்துக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்கள் ஆதாயம் கிடைத்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2014ஆம் வருடம் செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வெளியிட்டது. அதில் எந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கும் இனி நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப் பட்டிருந்தது. இதன் மூலம் மத்திய அரசு எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் புதிய ஒப்பந்தங்கள் போடுவது தடை செய்யப்பட்டது.
ஆனால் இதனால் நிலக்கரி ஊழல் முழுவதுமாக ஒரு முடிவுக்கு வரும் என அனைவரும் எதிர்பார்க்கும் இந்த நேரத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநில் மின் வாரியமும் அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரசஸ் நிறுவனமும் நிலக்கரி வெட்டி எடுக்க ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தீர்ப்புக்குப் பின் அமுலாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் முன் தேதியிட்டு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதே போல சத்தீஸ்கர் மாநிலத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கிழக்கு பார்சா மற்றும் காந்தா பாசன் ஆகிய இரு சுரங்கங்களில் நிலக்கரி வெட்ட அதானி குழுமத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவைகள் குறித்து மாநில மற்றும் மத்திய அரசுகள் எந்த ஒரு விளக்கமோ விசாரணையோ நடத்தவில்லை. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் அதானி குழுமத்தால் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை ராஜஸ்தான் மாநில மின் வாரியம் விலைக்கு வாங்கிக் கொள்கிறது. இதற்கான விலை விவரங்கள் வெளியிடப்படாமல் உள்ளது. அதானி குழுமம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கைகளின் படி வாரியம் தற்போதைய விலையை விட அதிகமாக அதாவது ரூ. 6000 கோடி தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இன்னும் 30 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது ரூ.1000 கோடிக்கு விற்பனையாகும் நிலக்கரியை இந்த அதானி நிறுவனத்தில் இருந்து ரூ.6000 கோடிக்கு வாங்க உள்ளது. இந்த விலை அவ்வப்போது சந்தை விலைக்கு ஏற்ப மாற்றம் பெறும் எனவும் ஒப்பந்தத்தில் உள்ளதாக கூறப்ப்டுகிறது. ஆகவே சந்தையில் நிலக்கரி விலை ஏற்றம் அடைந்தாலும் அதானி குழுமத்துக்கும் அதே விலை தரப்படும் என்பது தெளிவாகி உள்ளது.