டில்லி:

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஜெட் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ்-கேஎல்எம், டெல்டா ஏர்லைன்ஸ் அடங்கிய கூட்டமைப்பு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியா£கியுள்ளது.

தொடர் நஷ்டம் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்வதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு ஏற்கனவே எடுத்துவிட்டது. அதனால் ஏர் இந்தியாவை ஏற்று நடத்த ஏலதாரர்களுக்கு மத்திய அரசு விரைவில் அழைப்பு விடுக்கவுள்ளது.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ்-கேஎல்எம், டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பு ஏர் இந்தியா ஏலத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பதிலளிக்க 3 நிறுவனங்களும் மறுத்துவிட்டன.

ஏற்கனவே கடந்த 4 மாதங்களுக்குள் நரேஷ் கோயல் நடத்தும் ஜெட் ஏர்வேஸ்க்கும், ஏர் ஃபிரான்ஸ் -கேஎல்எம் குழுமத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 106 ஐரோப்பா நகரங்களையும், 44 உள்ளூர் நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகின்றன.

அதோடு ஜெட் ஏர்வேஸ் சிஇஓ வினய் துபேவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனும் தொடர்பு உள்ளது. இவர் அமெரிக்கன் ஏர்லைனின் ஆசிய பசிபிக் முதுநிலை துணைத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் ஃபிரான்ஸ்- கேஎல்எம் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களான டெல்டா, அலிதாலியா நிறுவனங்கள் இணைந்து தினமும் 270 விமானங்களை இயக்கி வருகிறது. இது போன்று 3 நிறுவனங்களும் ஏற்கனவே ஒன்றோடு ஒன்று இணைந்து செயலபட்டு வருவதால் ஏர் இந்தியா ஏலத்தில் இந்த கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.