டில்லி:
நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் எந்த மர்மம் இருப்பதாக சிலர் சந்தேகம் கிளப்பியிருக்கும் நிலையில் அது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பிரபல நடிகை ஸ்ரீதேவி, ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபாய் நகருக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி திடீரென மரணம் அடைந்தார்.
ஸ்ரீதேவியின் மரணம், இந்தியா முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியாத நிலை நிலவியது. இதையடுத்து அதில் மர்மம் இருப்பதாகப் பரபரப்பாக பேசப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட சிலர், ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து ஸ்ரீதேவிக்கு மிகக் கவனத்துடன் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அவரது உடலில் ஆல்கஹால் இருந்தது தெரியவந்தது. . மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.
பிப்ரவரி 27-ஆம் தேதி தனி விமானம் மூலம் ஸ்ரீதவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டு, அவரது வீட்டிலும், பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்திலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அவர், “நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஐக்கிய அரபு அமீரகம் எங்களிடம் கொடுத்து விட்டது. அந்த ஆவணங்களின் அடிப்படையில், அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியேதும் இருந்திருந்தால், இப்போது வெளியே அம்பலமாகியிருக்கும்” என்று தெரிவித்தார்.