டில்லி:
4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை டில்லி வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானை, விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி கட்டித்தழுவி வரவேற்றார்.
4 நாட்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் தனது மனைவியுடன் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்தியா வந்தடைந்தார். அவரை வரவேற்க பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகள் விமான நிலையம் சென்றிருந்தனர்.
அங்கு விமானத்தில் இறங்கிய இமானுவேலை, பிரதமர் மோடி கட்டித்தழுவி வரவேற்றார்.
சமீபத்தில் ஜோர்டான் மன்னர் 3 நாள் பயணம், கனடா பிரதமர் 7 நாள் பயணம் என வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வந்துள்ள நிலையில், தற்போது பிரெஞ்சு அதிபரும் 4 நாட்கள் பயணமாக இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த இமானுவேல், ‘‘ரஃபேல் ஒப்பந்த பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கலான சில விஷயங்களையும் தேவைப்பட்டால் இந்திய பிரதமர் மோடி வெளியிடலாம். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்.
அப்போது, இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஜெய்தாபூர் அணுமின்நிலையம் குறித்தும், இரு நாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அதைத்தொடர்ந்து, தாஜ்மஹால், வாரணாசி உள்பட பட இடங்களை சுற்றிப்பார்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.