டில்லி:
காவிரி நதி நீர் விவகாரத்தில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து இன்று டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இருப்பினும் இவர்களுடன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரும் டில்லி சென்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்த உள்ளது.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகா சார்பாக யார் கலந்துகொள்வார்கள் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்யுமா அல்லது கிடப்பில் போடுமா என்பது இன்றைய கூட்டத்தில் தெரிய வரும்,