டில்லி
வங்கி ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடியின் கூட்டாளி மெகுல் சோக்ஸி சிபிஐக்கு ஈ மெயில் அனுப்பி உள்ளார்.
நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி இருவரும் தாங்கள் இணைந்து நடத்திய கீதாஞ்சலி ஜெம்ஸ் குழுமத்தின் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி நடத்தியது தெரிந்ததே. வங்கியின் நடவடிக்கைக்கு பயந்து இருவரும் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர். நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸிக்கு சிபிஐ உடனடியாக விசாரணைக்கு வர வேண்டும் என ஈ மெயில் மூலம் தகவல் அனுப்பியது.
அதற்கு மெகுல் சோக்ஸி தற்போது பதில் அனுப்பி உள்ளார். அவர் அதில், “எனது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நான் இதற்கான காரணத்தை கேட்டதற்கு மும்பை வட்டார பாஸ்போர்ட் அலுவலகம் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. நான் எந்த விதத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரானவன் ஆனேன் என தெரியவில்லை.
எனது தற்போதைய உடல் நிலை காரணமாக என்னால் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளேன். இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் எனக்கு சில இருதயக் கோளாறுக்கான சிகிச்சை நடைபெற்றது. அதில் இன்னும் சில சிகிச்சைகள் நடத்த வேண்டி உள்ளது. அதனால் என்னால் இந்தியாவுக்கு வர முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.