சென்னை:

ரசுக்கு எதிராக வாக்களித்தாக, தற்போதைய துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை  தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை முடிவடைந்தைதை தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜெ.மரணத்தை தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் தனித்தனியாக செயல்பட்டது. அதையடுத்து சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். அதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இதில், அரசுக்கு எதிராக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்பட 11 பேர் வாக்களித்தனர்.

இந்த விவகாரத்தில், கொறடா உத்தரவை மீறியதாக ஓபிஎஸ் உள்பட  11 பேரையும் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, திமுக எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சி கொறடாவுமான சக்கரபாணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக்கையை முன்வைத்து, தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல் உள்ளிட்ட 4 பேரும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே இறுதி விசாரணை முடிந்துவிட்ட நிலையில், இன்று எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி இன்று  சட்டப்பேரவைச் செயலாளார் எழுத்துப் பூர்வ இறுதி வாதங்களை தாக்கல் செய்தார். இதையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.