சென்னை:
பெரியார் விவகாரத்தில் ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டங்கள் எழும்பியது. அதைத்தொடர்ந்து, அந்த பதிவை நீக்கியும், அந்த பதிவு தனது அட்மினால் பதிவிடப்பட்டது என்றும், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் இன்று புதிய பதிவை வெளியிட்டிருந்தார். மேலும் டில்லியில் செய்தியாளர்களிடம் இது குறித்து வருத்தம் தெரிவிப்பாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியளார்களை சந்தித்த நடிகர் கமலஹாசன், எச்.ராஜா வருத்தம் தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். மேலும், எச்.ராஜா சொன்ன வார்த்தை அம்பு எய்தது போல், அதை திரும்பப் பெற முடியாது என்றும் கூறினார்.
பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை; சிலைகளையும், கவுரவத்தையும் தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற கமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள இந்த சமயத்தில் பெரியார் பிரச்சனையை கிளப்பியுள்ளனர், இதில் மத்திய அரசின் சதி இருக்கலாம் என்றும், இந்த விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டு, காவிரி விவகாரத்தை கோட்டைவிட்டுவிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.