டில்லி
மாணவர்கள் நல்லொழுக்கம், அமைதி, மனிதத்தன்மை மற்றும் ஒற்றுமையில் சிறந்து விளங்க ராமகிருஷ்ணா மிஷனுடன் இணைந்து சிபிஎஸ்சி புதிய பாடத்திட்டம் துவங்க உள்ளது.
தற்போது மாணவர்களிடையே நல்லொழுக்கம் குறைந்து வருவதாக பல சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். கல்வித் துறை வல்லுனர்கள் பலரும் முன்பு நல்லொழுக்கம் என்னும் பெயரில் இருந்த பாடத்திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்லதாக குறை கூறுகின்றனர். மேலும் இது குறித்து பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிபிஎஸ்சி எனும் மத்திய கல்வி திட்ட ஆணையம் தற்போது ஒரு புதிய பாடத் திட்டம் குறித்து அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “மாணவர்களிடையே தொடக்கத்தில் இருந்தே மனிதத் தன்மை, அமைதி, ஒத்துப் போவது போன்ற நற்குணங்கள் உண்டாக்கப்பட வேண்டும். இவைகளை உருவாக்கவும், மேலும் வலுவாக்கவும் ஆணையம் ராமகிருஷ்ணா மிஷன் உதவியுடன் ஒரு கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்த உள்ளது.
இந்த திட்டம் ஆசிரியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்வித் திட்டம் மூன்று வருடக் கால கல்வி ஆகும், இது ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அல்லது ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கானது. இது அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயப் பாடம் இல்லை. விருப்பப் பட்டவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம்.
இந்தப் பாடதிட்டத்தை நடத்த விரும்பும் பள்ளிகள் வருடத்துக்கு 16 பீரியட்கள் இதற்காக ஒதுக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த பாடத்தை நடத்த உள்ள ஆசிரியர்கள் முதலில் இரு தினங்கள் பயிற்சி பெற வேண்டும். இதற்கு விருப்பம் உள்ள பள்ளிகள் ராமகிருஷ்ணா மிஷன் அலுவலகங்களில் பதிவு செய்துக் கொள்ளலாம்” என குறீப்பிடப் பட்டுள்ளது.