டில்லி

உச்சநீதிமன்றம் வாக்குச் சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் மொத்தமாக நடத்துவது குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது அந்தந்த வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளை தனித்தனியாக எண்ணி வருவது வழக்கம்.    முன்பு வாக்குச் சீட்டு முறை இருந்த போதிலிருந்தே அதே முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.    இதை எதிர்த்து பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா உட்பட சில ஆர்வலர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

அந்த வழக்கில், “ஒவ்வொரு வாக்குச் சாவடியின் வாக்குகளும் தற்போது தனித் தனியாக எண்ணப்பட்டு வருகிறது.   இதன் மூலம் ஒரு வாக்குச் சாவடி உள்ள பகுதியில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை எத்தனை பேர் நிராகரித்துள்ளார் என்பது தெரிந்து விடுகிறது.   அவ்வாறு இல்லாமல் அனைத்து வாக்குகளும் மொத்தமாக எண்ணப் பட வேண்டும்.

தேர்தல் விதிமுறைகளின் விதி எண் 59 ஏ வில் தேர்தல் ஆணையம் ஏதாவது தொகுதியில் வாக்குச் சாவடி வாரியாக எண்ணிக்கை தேவை இல்லை என கருதும் போது அனைத்து வாக்குச் சீட்டுக்களையும் கலந்து வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது.    அதே போல வாக்கு இயந்திரங்களிலும் டோடலைசர் என்னும் நுட்பம் உள்ளது.   அதன் மூலம் பதிவான வாக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு எண்ணிக்கை நடத்த முடியும்”  என கூறப்பட்டுள்ளது.

இதற்கு அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜெனரல் மணிந்தர் சிங், “இது போல அனைத்து வாக்குகளையும் டோடலைசர் மூலம் ஒருங்கிணக்கப்படும் போது வாக்குகளின் எண்ணிக்கை விவரம் வெளியில் தெரிய வாய்ப்புள்ளது.  மேலும் விதி எண் 59ஏ தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி வாரியாக எண்ணிக்கை நடத்துவதால் சட்டச் சிக்கல் ஏற்படும் என கருதினால் மட்டுமே மொத்த வாக்கு எண்ணிக்கை நடத்த முடியும்”  எனத் தெரிவித்தார்.

வாக்குச்சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கை தேவையா என்பது குறித்து பதில் அளிக்கும் படி உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு இட்டுள்ளது.