ஆலப்புழா:
கேரளா மாநிலம் பாலக்காட்டில் பசி கொடுமையால் ஒரு கடையில் உணவு பொருட்களை திருடிய அட்டப்பாடி வனப்பகுதியை சேர்ந்த பழங்குடி இன வாலிபர் மது அடித்து கொல்லப்பட்டார். இ ச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது போல் ஆண்டுதோறும் பசிக்கு பலர் உயிரிழந்து வருகின்றனர். மது மரணத்திற்கு பின்னர் இது போன்று பசிக்காக ஒரு உயிர் போகும் சம்பவம் நடக்க கூடாது என்று நாம் அனைவரும் சபதம் ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இச்சம்பவம் நடந்த கேரளாவிலேயே இதற்கு தீர்வு காணும் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தை பசி இல்லா மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று ஆலப்புழா மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சமுதாய ஓட்டல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஓட்டலில் பணம் செலுத்தும் கல்லா பெட்டியும் கிடையாது, காசாளரும் கிடையாது. சிபிஎம் வட்டார குழுவால் நிர்வகிக்கப்படும் ஸ்னேகஜாலம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஒட்டலை தொடங்கியுள்ளது..இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவராக மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளார். இதற்கான நிதியுதவியையும் அவரே அளித்துள்ளார்.
பசி வயிற்றை கிள்ளுகிறதா?. சாப்பாடு வாங்க பணம் இல்லையா? கவலை வேண்டாம். இந்த சமூக ஓட்டலு க்கு எந்த நேரத்திலும் வந்து சாப்பாட்டை இலவசமாக சாப்பிடலாம். பணம் கேட்கமாட்டார்கள். இந்த திட்டத்தை ஆதரித்து நிதியுதவி செய்ய விரும்புபவர்களுக்கு வசதியாக ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் நிதியுதவியை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.