சென்னை

ர்செல் சேவையை தமிழ்நாட்டில் நீட்டிக்க உத்தரவு  இடக் கோரி பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு சிவசங்கரன் என்பவர் தொடங்கிய ஏர்செல் நிறுவனம்  மொபைல் புழக்கத்தின் ஆரம்பத்தில் தொடங்கபட்டதால் அதற்கு எக்கச்சக்கமான வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர்.   பிறகு பலரும் இத்துறையில் கால் பதித்து சலுகைகளை அதிகம் தர ஆரம்பித்ததால் பலரும் வேறு நிறுவனங்களுக்கு மாறினர்.   காலப்போக்கில் இணைப்பு கிடைப்பதிலும் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

சமீபத்தில் கோபுர வாடகையை தராததால் இணைப்பு அடியோடு நின்று போனது.   அதையொட்டி பெரும்பான்மையானோர் வேறு நிறுவனங்களுக்கு  மாற ஆரம்பித்தனர்.   அதைத் தொடர்ந்து தங்கள் நிறுவனம் திவால் ஆகி விட்டதாக அறிவிக்கக் கோரி சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளித்தது.   அதனால் விரைவில் இந்நிறுவனம் மூடப்படலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

தமிழ்நாட்டில் ஏர்செல் சேவையை நீட்டிக்க உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இந்த மனுவை சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.  மனுவில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவரும் வேறு நிறுவனங்களுக்கு தங்கள் எண்ணை மாற்றிக் கொள்ள எம் என் பி வசதியை பெறும் வரை ஏர்செல் சேவையை தொடர்ந்தாக வேண்டும் என அந்த நிறுவனத்துக்கு ஆணையிட வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏர்செல் நிறுவனத்துக்கும் தேசிய தொலைதொடர்பு  ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.    ஏற்கனவே ஏர்செல் நிறுவனத்தின் சேவை வரும் ஏப்ரல் 15ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என தேசிய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.