மைசூர்:
தேனி மாவட்டம், கம்பம் கொண்டித்தொழு தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி- சுப்பம்மாள். இவர்களின் மகன் மணிகண்டன் (வயது 46). 2001ம் ஆண்டு ஐ.ஃஎப்.எஸ். பிரிவு அதிகாரியான இவர் கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், நாகர்கோலே புலிகள் காப்பக முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் சிறிதளவு தீ விபத்து ஏற்பட்டு அணைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இதை ஆய்வு செய்ய டி.பி.குபே வனச்சரகத்தில் உள்ள காக்கனகோட்டுக்கு வனத் துறை ஊழியர்களுடன் நேற்று காலை சென்றார்.
அப்போது இவர்களை யானை ஒன்று விரட்டியுள்ளது. அதிர்ச்சியடைந்த அனைவரும் சிதறி ஓடினர்.மணிகண்டன் மட்டும் தப்ப முடியாமல் யானையிடம் சிக்கிக் கொண்டார். யானை மணிகண்டனை தும்பிக்கையால் தூக்கிப் போட்டு மிதித்தது. தகவலறிந்து ஓடி வந்தவர்கள் சத்தம் எழுப்பியும், கற்கள், கம்புகளை யானை மீது எறிந்து விரட்டினர்.
மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மணிகண்டனுக்கு சங்கீதா (வயது 40) என்ற மனைவியும், மகள் நித்திலா (வயது 15), மகன் கபினேஷ் (வயது 8) ஆகியோர் உள்ளனர்.