அகர்தலா
பாஜக முதல்வராக அறிவிக்க உள்ள பிப்லாப் குமார் தேப் பற்றிய விவரங்கள் இதோ
திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 வருடங்களாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடத்தி வந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் இந்த மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதை தொடர்ந்து தற்போது பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக முதல்வராக திரிபுரா மாநில பாஜக தலைவரான பிப்லாப் குமார் தேப் ஐ அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரைப் பற்றிய விவரங்கள் இதோ.
பிப்லாப் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சார்ந்தவர் ஆவார். இவர் மேல்படிப்புக்காக டில்லியில் 15 வருடங்களுக்கு முன்பு வசித்துள்ளார். அப்போது இவர் ஒரு உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளராக பணி புரிந்துள்ளார். அத்துடன் பாஜக வின் மத்தியப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங்கின் உதவியாளராகவும் பணி புரிந்துள்ளார். பிறகு அவர் திரிபுரா மாநில பாஜக தலைவராக கட்சித் தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிப்லாப் தலைவராக முக்கிய காரணங்களாக சொல்லப்படுபவை : அவர் உள்ளூரை சேர்ந்த இளைஞர். அவரால் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிக்க சரியான வியூகம் வகுக்க முடியும். மேலும் ஆர் எஸ் எஸ் தொண்டராக இருந்த போதே மாநிலத்தில் பல சேவைகள் செய்து மக்கள் மத்தியில் தெரிந்த ஒரு முகமாக விளங்கியவர். எல்லாவற்றையும் விட அவர் மேல் எந்தக் குற்றச்சாட்டும் கிடையாது. அவர் ஒரு சுத்தமான அரசியல்வாதி என்பவைகளே ஆகும்.
தேர்தலின் போதே அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என மாநிலத்தில் கோரிக்கை எழுந்தது. ஆனால் கட்சித் தலைமை தேர்தலில் வெற்றி பெறாமலேயே பிரதமர் வேட்பாளரை அறிவிக்கக் கூடாது என காரணம் கூறி அந்த கோரிக்கையை மறுத்து விட்டது. தேர்தலில் வெற்றி பெருவதை முதலில் கவனிப்போம், பின்பு முதல்வரை தேர்ந்தெடுப்போம் எனவும் அப்போது தலைமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.