ஜெருசலேம்:

ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூவிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

டெலிகாம் ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ மற்றும் அவரது மனைவி சாராவிடம் ஆகியோரிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விரைவில் வாஷிங்டன் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த விசாரணை நடத்தப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் வீட்டிற்கு போலீசார் நுழையும் வீடியோ, மற்றொரு இடத்தில் அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளும் வீடியோவும் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.பேஸிக் இஸ்ரேலி டெலிகாம் நிறுவனம் தன்னுடைய செய்தி இணையதளத்தில் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, மனைவி சாராவும் ஆகியோர் குறித்து சாதகமான செய்திகளை வெளியிடுவதற்கு டெலிகாம் விதிமுறையை தளர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் பெஞ்சமின் நேட்டன்யாஹூவிற்கு நெருக்கமான 2 பேரை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். இந்த வகையில் கடந்த ஆண்டு வரை தொலைதொடர்பு துறையை தன் வசம் வைத்திருந்த பெஞ்சமின் நேட்டன்யாஹூவிடம் இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.

ஏற்கனவே 2 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது இந்த புதிய வழக்கு காரணமாக 4வது முறை பிரதமராக பதவி வகிக்கும் பெஞ்சமின் நேட்டன்யாஹூவிற்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது எந்த தவறும் இல்லை என்று பெஞ்சமின் நேட்டன்யாஹூ மறுத்துவிட்டார்.