டில்லி

ந்திய பல்கலைக்கழகங்களில் மொத்தம் உள்ள 16600 இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள ஆசிரியர் பணி இடங்களில் 5928 இடங்கள் காலியாக உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றம்  மத்திய அரசிடம் ஒரு வழக்கு தொடர்பாக நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் உள்ள ஆசிரியப் பணி இடங்களில் மொத்தம் எத்தனை இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன எனவும் அதில் எத்தனை காலியாக உள்ளன எனவும் கேட்டிருந்தது.   அதற்கு பதிலளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவிடம்  விவர்ங்களை அரசு கேட்டது.   அரசு அந்த விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், “இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும்  பிற்படுத்தப்பட்டோருக்கான ஆசிரியப் பணி இடங்கள் 16600 உள்ளன.  அவற்றில் தற்போது 5928 இடங்கள் காலியாக உள்ளன.”  என அறிவிக்கப் பட்டு இருந்தது.  இந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்துக்கும் அரசு அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அந்தப் பணியிடங்கள் நிரப்பப் படாதது குறித்து காரணம் கேட்டபோது, “ஒரே ஊதியம் மற்றும் ஒரே கல்வித்தகுதி ஆகியவைகள் கொண்ட பணி இடங்களை ஒரே நேரத்தில் அரசு நிரப்புவது வழக்கம்.   அப்படிப்பட்ட நேரத்தில் மட்டுமே இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அளிக்க முடியும்.   ஆனால் ஒரு துறையில் ஒரே ஒரு  பணி மட்டுமே காலியாக உள்ள நேரத்தில் இட ஒதுக்கீடு அங்கு அமுல் படுத்த இயலாது.  இது தான் இந்த இடங்கள் காலியாக இருக்க ஒரே காரணம்”  எனக் குழு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னாள் மத்திய அரசு செயலர், “அரசின் இந்த தாமதத்தின் மூலம் அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலப் போக்கில் ஒதுக்கீட்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.  அரசின் சட்டப்படி ஒரு பணி இட ஒதுக்கீட்டின்படி தகுதி உள்ளவர் கிடைக்கவில்லை எனில் அது பொது இடமாக மாற்றப்படலாம்.  அதனால் இவ்வாறு அரசு இடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது தவறு”  எனக் கூறி உள்ளார்.

இந்த இடங்களை உடனே நிரப்ப அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என பெயர் தெரிவிக்க விரும்பாத பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.