அகர்தலா:
திரிபுராவில் சட்டமன்ற தேர்தல் கடந்த 17ந்தேதி முடிவடைந்து நாளை வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார், பிரதமரையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. தற்போதைய தேர்தலில் கம்யூனிஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி திரிபுரா மாநில அரசு மீதும், முதல்வர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். வட மாநிலங்களில் பாரதியஜனதா ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது பேச்சு இருந்தாக விமசனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியுள்ள மாணிக் சர்க்கார், தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மோடி, மாணிக் சர்க்காரின் ஆட்சியில் திரிபுராவில் ஊழல் மலிந்திருப்பதாக குற்றம் சாட்டினார். அவர் தவறான தகவல்களை கூறி திரிபுரா மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற அவர், நமது நாடு, ஒரு கட்சியின் தலைவராக மட்டுமே செயல்படும் பிரதமரைக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
இதுபோன்ற பிரதமரிடம் இருந்தும், அவரது கட்சியினரிடம் இருந்து நாம் இத்தகைய மட்டரகமான அணுகுமுறையைத் தவிர்த்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.
மாணிக் சர்க்காரின் இந்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுரா மாநிலத்தின் இடதுசாரி அமைப்பின் முன்னணியின் அடையாளமாக திகழ்பவர் அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் தான் நாட்டிலேயே மிகவும் எளிமையான முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தமானவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை (மார்க்சிஸ்ட்) சேர்ந்த இவர் 1998 முதல் கடந்த 15 வருடங்களாக திரிபுராவின் முதல்வராக இருக்கிறார்.
தற்போது 59 வயதான மாணிக் சர்க்காருக்கு முதல்வருக்கு வழங்கப்படும் சம்பளம் மட்டும் கொடுக்கப்படுகிறது. மாத ஊதியமாக 9,200 ரூபாயும் அலவன்சாக 1,200 ரூபாயும் கொடுக்கப்படுகிறது. அந்த சம்பளத்தையும் அவர் கட்சி வளர்ச்சிக்கு தந்துவிடுகிறார். கட்சி தரும் 5,000 ரூபாயில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இவருக்கென்று தனியாக சொந்தமாக வீடோ, நிலமோ, நகையோ கிடையாது. இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக இவர் இந்தியாவின் எளிமையான முதல்வர் அந்தஸ்த்தில் வீற்றிருக்கிறார்.