டில்லி
சர்வதேச திரைப்படவிழாவை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ. 2.92 கோடி பணம் அளிக்க தூர்தர்ஷன் மறுத்துள்ளது.
மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் கீழ் தூர்தர்ஷன் இயங்கி வருகிறது. இந்திய அரசின் பல நிகழ்வுகள் தூர்தர்ஷன் மூலமே ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவைகளில் முக்கியமான நிகழ்வுகளில் வருடா வருடம் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்றாகும். கடந்த வருடம் இந்த திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது.
இந்த திரைப்பட விழாவை ஒளிபரப்ப தேசிய திரைப்பட முன்னேற்ற ஆணையம் மூலமாக தனியாருக்கு உரிமம் அளிக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பிரசார் பாரதிக்கு உத்தரவிட்டது. ஆனால் பிரசார் பாரதி குழுவில் இருந்த நடிகர் ராஜிவ் குமார் மற்றும் தூர்தர்ஷனின் இயக்குனர் சுப்ரியா சாகு அதை மறுத்துள்ளனர். இந்த ஒளிபரப்பை நடத்தும் கட்டமைப்பு தூர்தர்ஷனிடம் உள்ளதையும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
ஆனால் 2017ஆம் வருடம் பிப்ரவரி மாதம் பிரசார் பாரதியை சேர்ந்த அலி ரிஸ்வி தேசிய திரைப்பட முன்னேற்ற ஆணையத்திடம் ஒளிபரப்பும் உரிமைய அளித்தார். அந்த ஆணையம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு உரிமம் அளித்து, அந்த தனியார் நிறுவனம் இதை ஒளிபரப்பியது.
தனியார் நிறுவனம் தனது ஒளிபரப்புக் கட்டணமாக ரூ. 2.92 கோடிக்கான பில் தொகையை தூர்தர்ஷனுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தூர்தர்ஷன் குழுமம் ஏற்கனவே தாங்கள் ஒளிபரப்ப தயாராக இருப்பதாக சொல்லியும் தனியாருக்கு உரிமம் அளித்ததால் இந்த தொகையை நிறுவனத்துக்கு தர மறுத்துள்ளது.
இது குறித்து தூர்தர்ஷனுக்கும், செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் இடையில் சர்ச்சை உண்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தூர்தர்ஷனுக்கு அளிக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக ”தி ஒயர்” செய்தி நிறுவனம் தகவல்கள் அளித்துள்ளது.
இது குறித்து பிரசார் பாரதி மற்றும் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆகிய இரண்டு துறைகளிலும் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.