சிட்னி:

பயங்கரவாத தாக்குதலுக்குத துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு 44 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சிட்னி ரெயில் நிலையத்துக்கு வெளியே 2015–ம் வருடம் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் கர்ட்டிஸ் செங் (வயது 58) என்ற காவல்துறை ஊழியர் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலை நடத்தியது 15 வயது சிறுவன்.

சிட்னியில் உள்ள மசூதி ஒன்றில் 2015–ம் ஆண்டு அக்டோபர் 2–ந் தேதி அந்த சிறுவனை சந்தித்து, பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு கைத்துப்பாக்கி வழங்கியவர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராபன் அலாவ் (20) என்பவர் ஆவார்.

இதுதொடர்பாக ராபன் அலாவ் மீது ஆஸ்திரேலிய காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம்  விசாரித்தது.

விசாரணையின்போது ராபன் அலாவ், தன் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து  அவர் குற்றவாளி என்று உறுதி செய்த, உச்சநீதிமன்றம்  அவருக்கு 44 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

பயங்கரவாதத்துக்கு துணை போனதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலியர் ஒருவர் தண்டிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

44 ஆண்டுகள் சிறைவாசத்தின்போது, முதல் 33 ஆண்டுகள் அவருக்கு ‘பரோல்’ வழங்கப்பட மாட்டாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.