சண்டிகர்
மனித உரிமை ஆணையத்தின் காலிப் பணி இடங்களை நிரப்பாத அரியானா அரசு பசு பாதுகாப்பு ஆணையத்தின் காலிப் பணி இடங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்துள்ளது.
சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்கு முன் அரியானா மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆட்சியில் அரியானா மனித உரிமை ஆணையம் அமைப்பட்டது. அதற்கு பிறகு வந்த பாஜகவின் மனோகர்லால் கட்டாரின் ஆட்சியில் இந்த ஆணையத்தில் பல பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த 19 மாதங்களாக இந்த ஆணையத் தலைவர் பதவியும் கடந்த 5 மாதங்களாக இரு உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. இதனால் 2205 வழக்குகள் இந்த ஆணையத்தில் நிலுவையில் உள்ளன.
இது குறித்து தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கபூர், “அரியானா மனித உரிமை ஆணையத்தின் முக்கிய பதவிகள் காலியாக உள்ளன. இதற்கு ஆட்களை தேர்ந்தெடுக்காத கட்டார் அரசு பசுக்கள் பாதுகாப்பு ஆணையத்துக்கு சமீபத்தில் 16 பதவிக்கு ஆட்களை நியமித்துள்ளது. இது இந்த அரசுக்கு மனிதர்கள் மீது அக்கறை இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது.
அரியானா மனித உரிமை ஆணையத்தில் 2205 வழக்குகள் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இவற்றில் சுமார் 800 வழக்குகள் கடந்த 5 மாதங்களாக பதிவானவை ஆகும். இதற்கு ஆணையத்தின் முக்கிய பதவிகள் காலியாக உள்ளதே காரணம் ஆகும்.
கடந்த 2012ஆம் வருடம் அரியானா மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டபோது அரசால் அளிக்கப்பட்ட தொகை ரூ.2.5 கோடியாக இருந்தது. கடந்த 2017-18ஆம் வருடம் இந்த ஆணையத்துக்கு அரசு ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் இந்த ஆணையத்துக்கு தலைவரும், இரு உறுப்பினரும் இல்லாததால் இந்த ஆணையத்தின் எந்த ஒரு செயலும் நடப்பதில்லை. அதனால் இந்த நிதி உபயோகப்படுத்தப் படாமல் உள்ளது. இதற்கு தேசிய மனித உரிமை ஆணையமும் ஜனாதிபதியும் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து ஆணையம் சரியாக நடைபெற உதவ வேண்டும்” என கூறி உள்ளார்.