டில்லி:
நிதி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. விஜய் மல்லையாவை தொடர்ந்து நீரவ் மோடி நாட்டை விட்டு ஓடிவிட்டார்.
இவர்களை கைது செய்வது, சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்வது போன்றவற்றில் சட்ட சிக்கல் உள்ளது. இதற்கான புதிய சட்ட மசோதா மார்ச் 5ம்ந் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவக்கு இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், ‘‘ புதிய சட்டம்ன அமல்படுத்துவதன் மூலம் நிதி மோசடி குற்றவாளிகளின் அனைத்து சொத்துக்களும் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். அதுமட்டுமல்லாது அவரது பினாமி சொத்துக்களும் எளிதில் பறிமுதல் செய்ய முடியும். ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்யும் அத்தனை பேரின் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகளின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய முடியும். மிகப்பெரிய நிதி மோசடி குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எளிதில் நடவடிக்கை எடுக்க முடியும்’’ என்றார்.